




















Updated on:
புதுடெல்லி: ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதிமன்ற வளாகத்தில் கிழித்தெறிந்த மனைவி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்தார்.
டெல்லியை சேர்ந்தவர் ஷிகா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டில் ஷிகாவுக்கும் சாப்ட்வேர் இன்ஜினீயர் சவுரபுக்கும் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
கணவர் வீட்டை விட்டு வெளியேறிய ஷிகா, தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு ஷிகாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நிதிச்சுமை காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சவுரபுக்கு தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவர், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாமனாரை சேர்த்தார்.
மருத்துவ சிகிச்சைக்கான முழுச்செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். இதன்காரணமாக இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த கசப்புணர்வு மறைந்தது. ஷிகாவின் மனநிலையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக சவுரபும் ஷிகாவும் நீதிமன்றத்துக்கு சென்றனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்டியணைத்து கதறி அழுதார். தனது கையில் வைத்திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்களை கிழித்தெறிந்து வீசினார்.
இதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக இருவரும் நீதிபதியிடம் முறையிட்டனர். இதை நீதிபதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் சவுரபும் ஷிகாவும் உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。