



























Updated on
:
2 min read
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பாஜகவின் முக்கியத் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு முன்னிலையில் இருப்பவருமான சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளர் சந்திரநாத் ரத், கொல்கத்தா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதன்கிழமை இரவு (மே 6) வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியம்கிராம் பகுதியில் சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், காரை வழிமறித்து அவரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த சந்திரநாத் ரத், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரகங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, சந்திரநாத் ரத் பயணித்த காரை ஒரு நான்கு சக்கர வாகனமும், ஒரு மோட்டார் சைக்கிளும் பின் தொடர்ந்துள்ளன. தோஹரியா பகுதியில் கார் மெதுவாகச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மிக அருகில் இருந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மூன்று குண்டுகள் சந்திரநாத் ரத்தின் மார்பு, வயிறு மற்றும் தலைப் பகுதியில் பாய்ந்துள்ளன.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் பதிவு எண் பலகை இல்லை என்பது இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.
சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தோட்டாக்களை ஆய்வு செய்ததில், ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 'கிளாக் பிஸ்டல்' பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தடயவியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு காரைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர், அதன் எண் பலகை மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சந்திரநாத் ரத்துடன் காரில் இருந்த ஓட்டுநரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட சந்திரநாத் ரத், பவானிப்பூர் தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் களங்களில் சுவேந்து அதிகாரிக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். சுவேந்து அதிகாரியின் அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்காற்றியவர் என்பதால், இந்தப் படுகொலை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குத் திரிணமூல் காங்கிரஸ் தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணமூல், வன்முறைக்குத் தங்களது கட்சியில் இடமில்லை என்றும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதால், தேர்தல் ஆணையம் மாநில நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。