

















Updated on
:
2 min read
உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான அறிகுறி தென்படும்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது மட்டுமல்ல; நோய் வருமுன் காப்பதும் உடலில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து விழிப்புடன் இருப்பதும்தான்.
உடல் இயக்கம், ஊட்டச்சத்து, மனநலம் ஆகிய மூன்றையும் இணைக்கும் புள்ளியில் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவைகளை வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும்.
பல் மருத்துவம், பொது சுகாதாரம் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர் மருத்துவர் ரம்யா. அவருடைய சகோதரர் ரக்ஷித் எலும்பியல் அறுவை சிகிச்சையிலும் விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றவர். தத்தமது துறைகளில் பணி அனுபவம் கொண்ட இவர்கள் ‘தி மூவ்மென்ட் லேப்’ எனும் ஒருங்கிணைந்த மருத்துவ கிளினிக்கை நடத்திவருகிறார்கள்.
ஒருங்கிணைந்த மருத்துவம்?
“உடல்நலம், ஊட்டச்சத்து, மனநலம், உறக்கம், நேர்மறையான சமூக உறவுகள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்ப்பது என இந்த ஆறு விஷயங்களுமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.
பெரும் பாலானோர் இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். ஒன்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இன்னொன்றில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதும் என இரண்டு எல்லைகளில் ஆரோக்கியத்தை அணுகக் கூடாது.
நாம் தவறவிடும் அந்தச் சமநிலையை உருவாக்கவே ஒருங்கிணைந்த மருத்துவ கிளினிக்கைத் தொடங்கினோம். பொது வாக 35 வயதில் இருந்து ஒருவருக்கு உடலில் மாற்றங்கள் தென்படும். இந்த வயது முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவருக்குமான மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
நரம்பியல், மகப்பேறு மருத்துவம், பிசியோதெரபி என ஒவ்வொரு துறை சார்ந்தும் அந்தந்த துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வழிகாட்டுவார். அதற்கான ஒரு பாலமாகச் செயல்படு கிறோம்” என்கிறார் மருத்துவர் ரக்ஷித்.
திட்டமிடல்
வழக்கமான ஒரு மருத்துவ கிளினிக்கைப் போல அல்லாமல் உடல் அசைவுகளை மதிப்பிடும் ‘மூவ்மெண்ட் அனாலிசிஸ் லேப்’, மனநல ஆலோசனைக் கான மருத்துவ அறை, ஆரோக்கியம் தொடர்பான கலந்துரையாடல், பயிற்சிகள் நடைபெறும் ‘வெல்னெஸ் ஸ்பேஸ்’ என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்படுகின்றன.
உடல் இயக்கத் திறன், உடல் சமநிலை, தசை வலிமை, வாழ்க்கை முறை பழக்கங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து மதிப்பிடும் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். மருத்துவம் என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டிய முக்கியத் துறை.
இதில் பணியாற்றும் ஒருவர் நிபுணத்துவம் பெற்றிருப்பது மட்டுமல்லாது மக்களின் நம்பகத்தன்மையையும் பெறவேண்டியது சவாலான காரியம். அதை எப்படிச் சமாளிக்கிறார்கள்? “வழக்கமான ஒரு கிளினிக்கைப் போல அல்லாமல் வித்தியாசமாக இயங்கப் போகிறோம் என்கிற எங்களின் ஐடியாவுக்கு முதலில் ஆதரவு தந்தவர்கள் எங்கள் பெற்றோர்தான்.
அவர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. புதிதாக ஒரு விஷயத்தைத் தொடங்க இருக்கிறோம் என்றவுடன், அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவரின் உடல் இயக்கம், ரத்தப் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்து உடல்நலம், மனநலம், ஊட்டச்சத்து என எதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்கிற தனிப்பட்ட ஆலோசனையை வழங்குவோம்.
எங்கள் பெற்றோர், நண்பர்களைப் பரிசோதனை செய்துதான், இந்த கிளினிக் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்தோம். ஒரு திட்டத்தோடு நில்லாமல் ஏ, பி, சி என மாற்றுத் திட்டங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் சிக்கலான சூழ்நிலைகளின்போதும், அவற்றை எளிதில் சமாளிக்க முடியும்.
இது வொர்க்-அவுட் ஆகுமா என்கிற தயக்கம் இருந்தபோது நானும் என் சகோதரரும் ஒருவருக்கு இன்னொருவர் பக்கபலமாக இருந்தோம். நம்பிக்கையை இழக்கவில்லை. நலவாழ்வு முகாம்கள், கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் தொடர்ந்து நடத்துகிறோம்.
உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட சமூகத்தை உருவாக்கவே முயல்கிறோம். இந்த ஒருங்கிணைந்த மருத்துவம் என்கிற கான்செப்ட்டை மக்களிடம் எளிமையாக விளக்க இணையதளம் ஒன்றைத் தொடங்கி, அதில் அனைத்து விவரங்களையும் பதிவுசெய்துள்ளோம்.
சமூக வலைத்தளத்தின் உதவியோடும் பரவலாக்க முயற்சி செய்கிறோம். இப்படிப் பல முயற்சிகளின் கூட்டாகவே இன்று இந்த கிளினிக்கை வெற்றிகரமாக நிர்வகிக்க முடிகிறது” என்கிறார் மருத்துவர் ரம்யா.
தி மூவ்மென்ட் லேப் இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/themovementlaboffl/
- karthiga.rajendran@hindutamil.co.in
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。