


























Updated on:
சென்னை: மனைவியை கொலை செய்து விடுவேன் எனக் கூறி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் கணேஷ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜான்பாஸ்கா (59). இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி அனுராதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்துவருவதாக கூறப்படுகிறது.
அனுராதா தனது குழந்தைகளுடன் அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜான்பாஸ்கா நேற்று முன்தினம் இரவு மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த தனது மகள் கரீனாவிடம், தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி, அனுராதாவை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்தபடியே வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த கரீனா, தனது தாயிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அனுராதா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், ஜான்பாஸ்காவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்த ஏர்கன் வகை துப்பாக்கி மற்றும் 180 டம்மி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。