

























Updated on
:
2 min read
புதுடெல்லி: ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதேபோன்ற முடிவுகள்எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாட்டில் மசூதி- கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் உ.பி.யில் அதிகபட்சமாக 6 வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, ம.பி., டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு உள்ளது. தற்போது வெளியான போஜ்சாலா தீர்ப்பு, இந்தியாவின் எதிர்காலம் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
ஏனெனில் அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோயில் வழக்கால் நாடு முழுவதும் பல கலவரங்கள் ஏற்பட்டு உயிர்களும் பலியாயின. இதையடுத்து காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஆட்சியில், ‘மத வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991’ இயற்றப்பட்டது.
இதன்படி, நாடு சுதந்திரம் அடைந்த நாளில் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அவற்றில் எந்த மாற்றமும் செய்ய முடியாது எனவும் அவற்றின் மீது வழக்கும் தொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டது. ராமர் கோயில் மீதான வழக்கின் தீர்ப்பு 2019-ல் வெளியாவதற்கு முன்பாகவே மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
எனினும், ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் நிலைமை மெல்ல மாறி வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வாராணசி கியான்வாபி மசூதி வழக்கு மற்றும் மதுரா ஷாயி ஈத்கா மசூதி வழக்கு உயிர் பெற்றன. மேலும், நாடு முழுவதும் சுமார் 1,800 மசூதிகளும் இஸ்லாமியக் கட்டுமானங்களும் பண்டைய கோயில்களை இடித்த பின்னரே கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதில் உ.பி.யில் அதிகபட்சமாக 299 புகார்கள் உள்ளன. இதுபோல் கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ம.பி.யில் புகார்கள் உள்ளன.
மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ல் இயற்றப்பட்டபோது அயோத்தி வழக்குக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிலைமை 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படியே தொடர வேண்டும் என்று அச்சட்டம் வலியுறுத்தியது. இதன் மூலம், பண்டைய கோயில்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று கோருவதற்கான உரிமையை இந்து தரப்பு இழந்தது.
அச்சட்டத்தில் அயோத்தி வழக்கைப் போலவே காசி, மதுரா வழக்குகளையும் விதிவிலக்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அன்று அச்சட்டத்தை எதிர்த்த பாஜக, இன்று காசி, மதுரா போன்ற வழக்குகளுக்காக அச்சட்டத்தை ரத்து செய்யுமா என்ற கேள்விக்கும் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。