























Updated on
:
1 min read
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோடினி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் காரணமாக கோடினி கிராமம், இரட்டையர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இரு குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படும். தற்போதைய சூழலில் எங்கள் கிராமத்தில் 550 பேர் இரட்டையர்களாக உள்ளனர்.
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணமாகி வெளியூர்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பெரும்பாலும் இரட்டையர்களாக உள்ளனர். இதற்கு மரபணு காரணமாக இருக்கலாம். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கோடினி கிராமம் குறித்து இந்திய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி உள்ளன.
கிராமத்தின் குடிநீர், மக்களின் உணவு பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து இந்த நிறுவனங்கள் ஆய்வு நடத்தி உள்ளன. நைஜீரியாவின் இக்போ-ஓரா சமுதாயத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கமாக உள்ளது. இதற்கு சில உணவு வகைகள் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
ஆனால் கோடினி கிராமத்தைப் பொறுத்தவரை உணவு வகைகளுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறப்புக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. கிராம மக்களின் மரபணு தொடர்பாகவும் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். ஆனால் இதிலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதர கேரள மக்களைப் போன்றே கோடினி கிராம மக்களின் மரபணுவும் இருக்கிறது. இரட்டைக் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。