


























Updated on:
புதுடெல்லி: நியாயமான தேர்வுகளையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் கோரும் மாணவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்தும் அளவுக்கு மோடி அரசு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, இதற்காக தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராடுபவர்களை ‘பயங்கரவாதிகளின் பி டீம்’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்திருந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதை வன்மையாக கண்டித்துள்ளார். தனது இந்த பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிகார மமதையில் மூழ்கியுள்ள மோடி அரசு இப்போது எந்த எல்லைக்குச் சென்றுள்ளது என்றால், தங்கள் உரிமைகள், நியாயமான தேர்வுகள், பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றைக் கோரும் மாணவர்களைக்கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் அளவுக்கு சென்றுள்ளது.
யாருடைய தோல்விகளால் வினாத்தாள்கள் பலமுறை கசிந்தனவோ, யாருடைய தவறுகளால் 20 மாணவர்கள் தங்கள் உயிரை இழந்தார்களோ, யார் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளினாரோ அவரே இன்று துயரத்தில் உள்ள மாணவர்களையும் தங்கள் குரலை எழுப்புபவர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்.
ஆனால், இது ஒன்றும் புதிதல்ல. நாட்டின் உணவு உற்பத்தியாளர்களான விவசாயிகளை தொழில்முறைப் போராட்டக்காரர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் அவர்கள் அழைத்தார்கள். கேள்விகளை கேட்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தினார்கள். இப்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பயங்கரவாதிகள் என அழைக்கிறார்கள்.
அரசாங்கத்தை கேள்வி கேட்கும் எவரையும் தேசத் துரோகி என்று முத்திரை குத்துவதுதான் அவர்களின் ஒட்டுமொத்த அரசியலே. நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், தனது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக தாக்குங்கள். ராஜஸ்தானின் கோட்டா நகரில் சொன்னதையே இப்போது மீண்டும் சொல்கிறேன். இன்றைய கல்வி அமைப்பு வெறும் பணம் பறிக்கும் ஒரு மோசடிக் கூடாராமாக மாறிவிட்டது. இது இப்படியே தொடர நான் அனுமதிக்க மாட்டேன். ஒவ்வொரு மாணவரும் குறைந்த விலையில் தரமான கல்வியையும் நியாயமான தேர்வுகளையும் பெறுவதை உறுதி செய்வதற்கான இந்த குரலை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。