























திண்டுக்கல்லில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
Updated on:
திண்டுக்கல்: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று பிரச்சாரத்தை முடித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றிரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மாலையில் தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வேண்டுமென்றே கூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான் அவர் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுவது மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள். ஐந்து மாநிலத்தில் தான் தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் இல்லை.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை நிறைவேற்ற இப்பொழுது அருமையான தருணம். அதை அவரால்(ஸ்டாலினால்) பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கிடைப்பது, பெண்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஒன்று. இன்று அது நிறைவேறும் சூழ்நிலை. அதை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை.
அதனால் அவரது கருத்தை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில் அவ்வாறு கூறுகிறார். மத்திய அரசு பெண்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் விதமாக நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளது” என தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。