

























Updated on
:
2 min read
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று காலை (ஏப்.27-ம் தேதி) ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் பெருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக தேருக்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தோ், 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்துள்ளது.
தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளினர்.
பின்னா், காலை 6.20 மணிக்கு திருத்தேரை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தா சுவாமி, தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வேல் முருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் தியாகேசா, ஆரூரா என்ற பக்தி கோஷத்திற்கு மத்தியில் தேர் நிலையை விட்டு நகர்ந்து ஆடி அசைந்து வந்தது . தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்துறை, தீணையப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து செய்திருந்தனர்.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி வடக்கு வீதி சாலையில் இரு புறமும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ள இடங்களில் இரும்புக் கம்புகளை கொண்டு தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி செய்யப்பட்டிருந்தன. தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக 14 இடங்களில் தேர் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。