




















Updated on:
மதுரை: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பதிவாகும் வணிக அளவு கஞ்சா வழக்குகளில் ஆதாரம், ஆவணங்கள் இல்லாததால் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு பெரும் பிரச்சினையாக உள்ளது. போதை பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். கஞ்சா வழக்கில் முதலில் ஒரு சிலரை கைது செய்யும் போலீஸார், அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலரை வழக்கில் சேர்க்கின்றனர்.
கஞ்சா வழக்கை பொருத்தவரை வணிக அளவான 20 கிலோவுக்கு மேல் கஞ்சா வைத்திருக்கும் வழக்கில் ஆவணங்கள், ஆதாரங்கள் சரியாக இருந்தால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்காது. இந்நிலையில் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் வணிக அளவு கஞ்சா வழக்கில் கைதாகும் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெறுவது தெரியவந்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், மதுரை உட்பட 14 மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் கைதானவர்கள் குறிப்பாக 20 கிலோவுக்கு மேல் கஞ்சா வைத்திருந்ததாக பிடிபட்டவர்கள் பலர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த வழக்குகளில் போதுமான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாததால் ஜாமீன் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வணிக அளவிலான கஞ்சா வழக்கில் தொடர்புடைய பலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர்கள் கூறுகையில், “கஞ்சா வழக்கில் முதலில் கைது செய்யப்படும் நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பலர் வழக்கில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்க வேண்டும். வழக்கில் கூடுதல் நபர்களை சேர்க்கும் போது முதல் குற்றவாளிகளுக்கும் கூடுதலாக சேர்க்கப்படும் நபர்களுக்கும் இடையிலான தொடர்புக்கான ஆதாரங்கள், போன் தொடர்புகள், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட விபரங்களை வழக்கில் சேர்க்க வேண்டும். இந்த ஆதாரங்கள் இல்லாத போது எளிதில் ஜாமீன் கிடைக்கிறது” என்றனர்.
போலீஸ் சார்பில் கூறுகையில், “கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் கஞ்சா அளவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. கைதாகும் நபர்களிடம் விசாரித்து ஆதாராங்களை திரட்டி அவர்களுடன் தொடர்படையவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கஞ்சா பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் நோக்கத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。