
























Updated on
:
1 min read
அது கரோனா இரண்டாம் அலை காலம். அப்போது சேலத்தில் அரசுப்பணி. நானும் என் மனைவியும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தோம். எதிர்பாராத விதமாக எங்கள் இருவருக்குமே கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டோம். யாருடைய உதவியும் இன்றி இதை எப்படிச் சமாளிப்பது என்று என் மனைவி திகைத்தபோது ‘நாம்’ இதை எதிர்கொள்வோம் என்றேன். வீட்டுவாசலில் நாள்தோறும் பால், காய்கறிகள் வைக்கப்பட்டன. அப்போதுதான் சமையல் எனும் கலையை அறிய ஆரம்பித்தேன்.
சமையல் என்பது, ‘ஆரோக்கியத் தொழில்நுட்பம்’ என்பதை அறிந்தபோது அக்கலையை மேலும் அறியும் ஆர்வம் ஏற்பட்டது. இருவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு என் மனைவி மேற்பார்வையில் சமைக்கத் தொடங்கினேன். ஆரோக்கிய உணவால் நாங்கள் நோயிலிருந்து மீண்டதில் மகிழ்ச்சி.
பிறகு பணிமாற்றம் காரணமாக நான் சென்னையிலும் என் மனைவி சேலத்திலும் இருக்க வேண்டிய சூழல். இந்நிலையில் மனைவிக்குச் சிறு விபத்தில் வலக்கை மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டது. எங்கள் இருதரப்பு உறவுகளுமே உதவிக்கு வரவில்லை. யாரிடமும் உதவி கேட்க முடியாத நிலை. நான் விடுப்பு எடுத்துக்கொண்டு மனைவியைப் பராமரிக்கத் தொடங்கினேன்.
சமையலறை முழுவதும் என் பொறுப்பில் வந்தது. சமையலறையில் வாசம் செய்தபோதுதான் மனைவியின் துயரம் புரிந்தது. பணிநிமித்தம் மீண்டும் அலுவலகம் சென்றபோது என் மனைவி தனித்து இயங்கச் சிரமப்பட்டார்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சேலம் வந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து விட்டு திங்கள் காலை சென்னை திரும்புவேன். சமையல், பராமரிப்பு எனத் தொடர்வேலைகள் எனக்கு உடல்சோர்வையும் மனச்சோர்வையும் அளித்தாலும், சமையலை அறிந்துகொண்டதும் மனைவிக்கு உதவுவதும் பெரும் நன்மைகள்தானே!
‘ஓய்வில்லா வீட்டு வேலைகளில் இருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்’ என்று லெனினும் பெரியாரும் சொன்ன வார்த்தைகளோடு ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற பெரியாரின் நூலையும் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்கிற ச. தமிழ்ச்செல்வனின் நூலையும் வாசித்த தருணத்தை நினைவுகூர்கிறேன்.
‘ஓர் ஆண் சமைப்பதா?’ என்கிற மனப்பான்மையை அழித்து, மனைவி என்னும் சக மனுஷி குறித்த புரிதலோடு சமையலறையில் என்னை நுழைய வைத்ததில் இந்தப் புத்தகங்களுக்கும் பங்கு உண்டு. உணவைப் பகிர்ந்து உண்ணும்போது உணவுத் தயாரிப்புப் பணியைப் பகிர்வதும் அவசியம் என்கிற உணர்வே உறவை அர்த்தமுள்ளதாக்கும்.-
- ஆர்.மோகன், காஞ்சிபுரம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。