























Updated on:
எவியன் (பிரான்ஸ்): இந்தியா - அமெரிக்கா இடையேயான பரஸ்பர நன்மை பயக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை மிக விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
16 மாதங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்தித்து நடத்திய இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா - அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, நெருக்கமான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் தங்களுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் (பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப்) உறுதிப்படுத்தினர்.
இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி வெளியிட்டனர். மேலும், சமச்சீரான, பரஸ்பரம் நன்மை அளிக்கும், வணிக ரீதியில் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மிக விரைவில் முடிப்பதற்கானப் பணிகளை மேற்கொள்ளுமாறு இரு தலைவர்களும் தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.
பிரதமர் மோடி தனது உரையின்போது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாஷிங்டன் டி.சி-யில் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்ததை நினைவுகூர்ந்து, அந்த சந்திப்பு இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அப்பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் வழிவகுத்த அதிபர் ட்ரம்ப்பின் முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கான முக்கியத்துவத்தையும், மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தையும் பிரதமர் மோடி, ட்ரம்ப்பிடம் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。