


























Updated on
:
1 min read
போபால்: நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிப்பதாக போபால் மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவை சேர்ந்த நடிகை ட்விஷா சர்மா, மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்கை கடந்தாண்டு திருமணம் செய்தார். இவர் போபாலில் உள்ள கணவர் வீட்டில் கடந்த 11-ம் தேதி தூக்கில் தொங்கினார். வரதட்சணை கொடுமையை சந்தித்த ட்விஷா சர்மா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதையடுத்து ட்விஷாவின் மாமியார் ஒய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள கணவர் சமர்த் சிங்கை போலீஸார் தேடி வருகின்றனர். நீதிமன்றத்தில் இருந்து நிவாரணம் பெற, கிரிபாலா சிங் நீதித்துறை பின்னணியை பயன்படுத்துவதாகவும் ட்விஷா சர்மாவின் தந்தை புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் போபால் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் ட்விஷா சர்மா வழக்கு விசாரணை குறித்து கூறியதாவது: ட்விஷா சர்மாவின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனை அறிக்கைகள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்கின்றன. அதனால் தற்கொலை கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்கிறோம். தற்கொலை முடிவு எடுத்ததற்கான சூழலை ஆய்வு செய்து வருகிறோம்.
எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் இந்த வழக்கை விசாரிக்கிறோம். சமர்த் சிங் விரைவில் கைது செய்யப்படுவார். அவரை பல இடங்களில் போலீஸார் தேடிவருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ட்விஷா குடும்பத்தார் 2-வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை போபால் நீதி மன்றம் நேற்று நிராகரித்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。