

















Updated on
:
1 min read
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்கள் அடுத்த 30 நாட்களுக்குள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக ‘‘கண்டறிதல், நீக்குதல், வெளியேற்றுதல்’’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிடிபடும் வங்கதேச மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் மூலம் வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பு மையங்களை அமைக்கவும் முதல்வர் சுவேந்து உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரின் சோதனையில்சிக்கும் வங்கதேச மக்கள், இந்த சிறப்பு தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவார்கள். மாவட்ட ஆட்சியரின் விசாரணைக்குப் பிறகு அவர்கள் பிஎஸ்எப் படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அந்த மாநிலத்தில் தற்போது சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணி தீவிரப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக கடந்த இரு வாரங்களில் மட்டும் சுமார் 26,000-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவே வங்கதேசத்துக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தின் ஹக்கிம்பூர் எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் குவிந்து வருகின்றனர். பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பிஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு வங்க அரசு வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச மக்களை தங்க வைக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள். பிடிபடும் வங்கதேச மக்கள் நேரடியாக பிஎஸ்எப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。