


























Updated on:
உல்கா குப்தா, அதிதி பாடியா, ஐஸ்வர்யா ஓஜா முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. கமக்யா நாராயண் சிங் இயக்கிய இப்படத்தை விபுல் ஷா தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த பிப்.27-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. விசாரித்த நீதிமன்றம் 2 வாரங்களுக்கு படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. தயாரிப்பாளர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘கேரளா’ என்ற வார்த்தையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவின் அடிப்படையில், தயாரிப்பாளர் விபுல் ஷாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொச்சியைச் சேர்ந்த யோஹன் ஜார்ஜ் தாக்கல் செய்த மனுவில், திரைப் படத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் கேரள மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழையும் அவர் எதிர்த்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், படம் ஏற்கெனவே வெளியாகி விட்ட நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு, படம் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளதால் அதன் தாக்கம் தொடர்கிறது என்றார். இதையடுத்து, தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் விசாரணைக்குரிய தன்மை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。