





















தாண்டிக்குடி அருகேயுள்ள புல்லாவெளி அருவி பகுதிக்கு ஆபத்தான முறையில் செல்லும் இளைஞர்கள்.
Updated on
:
2 min read
பழநி: ‘ரீல்ஸ்’ மோகத்தில் கொடைக் கானல் தாண்டிக்குடி அருகே யுள்ள புல்லாவெளி அருவிக்கு தடையை மீறிச் சென்று சுற்றுலாப் பயணிகள் குளித்து வருவதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி அருகே ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி. ஆடலூர், பன்றிமலையில் பெய்யும் மழை நீர் புல்லாவெளியில் அருவியாக கொட்டுகிறது.
இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர், திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை அருவியின் மேற்பரப்பில் இருந்து மட்டுமே கண்டு ரசிக்க முடியும். பல நூறு அடி கீழே இறங்கிச் சென்றால்தான் அருவியில் குளிக்க முடியும்.
ஆனால், ஆபத்து நிறைந்துள்ளதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு புல்லாவெளி அருவியை கண்டுபிடித்த ஆங்கிலேயேர், மரத்தால் அமைத்த தொங்கு பாலத்தை கடந்துதான் அருவிக்கு செல்ல வேண்டும். இப்பாலத்தை இப்பகுதியினர் ‘ஆடு’ பாலம் என்றும் அழைக்கின்றனர்.
அருவிக்கு செல்ல தடைபோதிய பராமரிப்பின்றி பாலம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. இயற்கைச் சூழல் நிறைந்த இப்பகுதி வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழக்கின்றனர்.
இதுவரை இந்த அருவியில் 14 பேர் தவறி விழுந்து இறந்துள்ளனர். அதனால், புல்லாவெளி அருவி, பேத்துப்பாறையில் உள்ள அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகள் அனைத்தும் தற்காலிகமாக சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் 2025 அக்.25-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் ‘ரீல்ஸ்’ மோகத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்துவரும் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவிக்கு சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விதமாக குளிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் ஆபத்தான முறையில் புகைப் படமும் எடுக்கின்றனர். கோடை சீசனையொட்டி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைக் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி அருவியை சுற்றுலாத் தலமாக்கும் வகையில் ரூ.3 கோடியில் சாலை வசதி, அருவிக்குச் செல்ல படிக்கட்டுகள், உடை மாற்றும் அறைகள் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் பணிகள் நிறைவடையாத நிலையில், சிலர் தடையை மீறி ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். அருவிக்கு சென்று பார்வையிட மற்றும் குளிப்பதற்கு முயற்சிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அருவிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。