






























Updated on:
சென்னை: திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்குள் விசாரி்த்து முடிக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் சரக்கு வாகனத்தில் திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களான சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரு போலீஸாரும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், 2 மாதத்துக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதித்து வருவதாகவும் எனவே விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரியும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைத்தனர். அதேநேரம் இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது புரியவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து ஜூலை 31-க்குள் முடிக்க திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。