




















Updated on
:
1 min read
தென்கோடி மாவட்டத்தில் ‘வணக்கத்துக்குரியவராக’ இருந்த சூரியக் கட்சி புள்ளியானவர், மாதா மாதம் பெரிய வீட்டு ‘மாப்பிள்ளை சார்’ மூலமாக சென்னைக்கு ‘உரிய மரியாதைகளை’ தட்டாமல் செய்து வந்தாராம். அதற்கு பிரதிபலனாக அவருக்கு இம்முறை எம்எல்ஏ சீட் வாங்கிக் கொடுத்தாராம் மாப்பிள்ளை சார்.
அந்த பிடிமானத்தை வைத்தே மாண்புமிகு பதவியையும் பிடித்துவிடலாம் என மனக்கோட்டை கட்டியவர், “கண்டிப்பா ஜெயிச்சுடுவேன்” என திடமான நம்பிக்கை கொடுத்ததால் ‘வணக்கத்துக்குரிய’ உள்ளாட்சிப் பதவியை தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ராஜினாமா செய்துவிடும்படி தலைமையில் இருந்து சொன்னார்களாம்.
அதற்கேற்ப அங்கே விசில் பார்ட்டியில் நின்ற வேட்பாளரை தனது கைக்குள் போட்டுக் கொண்ட ‘வணக்கமானவர்’, எதிர்த்து நின்ற இலைக் கட்சி ‘சுந்தரமானவரை’ வீழ்த்த விசில் பார்ட்டியை வைத்தே வியூகம் வகுத்தாராம். விசில் வேட்பாளரும் ‘சுந்தரமானவரும்’ ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இலைக்கு விழும் சாதி ஓட்டுகளை பிரிக்க விசில் பார்ட்டிக்கு 2 ‘சி’ ரொக்கமும் 5 பிரச்சார வாகனங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தாராம்.
இதில் என்ன விநோதம் என்றால், சாதி ஓட்டை பிரிப்பதற்காக மட்டுமே களத்தில் இறங்கிய விசில் பார்ட்டிக்கு மக்கள் சரமாரியாக வாக்குகளை அள்ளித் தெளித்துவிட்டார்களாம். இதனால், பார்டரில் இலைக் கட்சி வேட்பாளரே பாஸாகி ‘வணக்கமானவர்’ வான்டடாக ஃபெயிலாகிப் போனாராம். இதையடுத்து இப்போது, ’வணக்கமானவரால்’ இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ‘துணை வணக்க’ அம்மணியே தெம்பாக வந்து ‘வணக்கத்துக்குரியவராக’ அமர்ந்து ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
இதனால் சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட இந்த ரகசியத்தை வெளியில் சொல்லி வேதனையைப் போக்கமுடியாமல் ‘உள்ளதும் போச்சே’ என உள்ளுக்குள்ளேயே வெதும்பிக் கொண்டிருக்கிறாராம் முன்னாள் ‘வணக்கத்துக்குரியவர்’.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。