

























Updated on
:
1 min read
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் வீழ்த்தியது.
சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த அவர், 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.
229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. இஷான் கிஷன் 31 பந்துகளில் 74 ரன்களும், அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 57 ரன்களும் விளாசினர். நடுவரிசையில் ஹென்றிச் கிளாசென் (29) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (36) ஆகியோர் அதிரடி காட்ட, ஐதராபாத் அணியின் ரன் வேகம் குறையாமல் இருந்தது.
இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சூர்யவன்ஷியின் சதம் ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், ஹைதராபாத் அணியின் கூட்டு முயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。