




















Updated on
:
2 min read
வாஷிங்டன்: வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகாரிகள் புடைசூழ பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
இந்த விருந்து விழா வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு அதிகாரியை நோக்கி தனியொரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு கருதி அதிபர் ட்ரம்ப் மற்றும் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக அந்த விருந்து விழாவில் இருந்து வெளியேற செய்து, அழைத்து சென்றனர்.
என்ன நடந்தது? - வாஷிங்டனில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களுக்கான ஆண்டு விருந்து நடைபெற்றது. இதில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது ஆயுதங்களுடன் வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு கட்டமைப்பை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போதுதான் தன் வசம் இருந்த ஷாட்-கன் துப்பாக்கியால் பாதுகாப்பு பணியில் இருந்து அதிகாரி மீது சுட்டுள்ளார். அந்த சப்தம் கேட்டு விருந்து கூடத்தில் இருந்தவர்கள் மேசைக்கு கீழே தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ அந்த விருந்தில் பங்கேற்ற ட்ரம்ப் வெளியேறினார்.
தாக்குதல் நடத்திய நபர் யார்? - இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலைமையை சீராக்கும் வகையில் களத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு அதிகாரிகளின் பணி அற்புதமானது. துணை அதிபர் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
ஆயுதங்களுடன் ஒரு நபர் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்த பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் ஒரு அதிகாரி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவரது கவச உடை தாக்குதலில் இருந்து அவரை காத்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது விசாரணையில் தான் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்தியது 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என தெரியவந்துள்ளது. அவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. அவரது புகைப்படமும் இப்போது வெளியாகி உள்ளது. தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சியை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2024-ல் ட்ரம்ப்பை கொல்வதற்கான முயற்சி இரண்டு முறை நடைபெற்றது. இதில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தாக்குதலில் அவர் காயமடைந்தார். தற்போது தாக்குதல் நடந்த ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த 1981-ல் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் காயமடைந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。