





















Updated on:
கும்பகோணம்: கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் தவெகவினர் நள்ளிரவில் ரகசியமாக பூஜை செய்த நிலையில், புகை எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.
கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே எம்எல்ஏ அலுவலகம் கடந்த 1996- 2021-ல் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம் சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றி கோ.சி.மணி மற்றும் சாக்கோட்டை க.அன்பழகன் எம்எல்ஏக்களாக இருந்து வந்தனர். இதனால் அந்த அலுவலகம் திமுக வசம் இருந்து வந்தது.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியை முதன்முறையாக தவெக வேட்பாளர் வினோத் வெற்றி பெற்றார். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில் வேளாண் துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் மராமத்து பணிகள் நிறைவு பெற்று பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு பெறுப்பேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நேற்று வரை எம்எல்ஏ அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது வேளாண் துறை அமைச்சராகவும் உள்ள கும்பகோணம் எம்எல்ஏ வினோத்திடம் கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக எம்எல்ஏ அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அலுவலகம் பூட்டி கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 14-ம் தேதி அமாவாசை அன்று நள்ளிரவு 12 மணி அளவில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு பூஜை பொருட்களுடன் சிலர் மற்றும் உள்ளூர் தவெக நிர்வாகிகளும் வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து, உள்ளே வலதுபுரத்தில் உள்ள அறையில் ரகசியமாக செங்கல்கற்களை கொண்டு யாக குண்டம் அமைத்து மந்திரங்கள் வாசித்து யாகம் வளர்த்து பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்து புகை எழும்பியதால், அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அங்குச் சென்று பார்த்தபோது, உள்ளே யாகம் வளர்ப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் மவுனமாக திரும்பி விட்டனர்.
இதையடுத்து, யாகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட செங்கல் கற்கள், குங்குமம், திருநீறு, மா இலை உள்ளிட்டவை அலுவலக வாசலில் வைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு யாகம் குறித்து விவரம் அறிந்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது, ‘மங்களகரமான காரியங்களுக்கான யாகங்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்தப்படும். நள்ளிரவில் நடத்தப்படும் யாகங்கள் பிறருக்குத் தீங்கு விளைவித்தல் போன்ற விபரீத காரியங்களுக்காகவும், பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளை நீக்கவும், நள்ளிரவில் உக்ர மாந்திரீக யாகங்கள் நடத்தப்படுவதுண்டு’ என தெரிவித்தனர்.
அரசு அலுவலகமான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பொறுப்பாளரான வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்றி, கட்சியினர் மற்றும் சிலர் நள்ளிரவு அலுவலகத்தைத் திறந்து பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。