






















குற்றவாளி கருணாஸை நீதிமன்றம் அழைத்து வந்த போலீஸார். (உள்படம்) சிறையில் தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன். | படம்: செ. ஞானபிரகாஷ் |
Updated on
:
2 min read
புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி நேற்று அறிவித்தார். மே 5-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
2 நாட்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது.
முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த காக்கா என்ற கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
ஒருவர் தற்கொலை
இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
விசாரணை முடிந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மே 5-ம் தேதிஇரு தரப்பு வாதத்துக்குப் பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்ப தாகவும் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம் 366 வது பிரிவில் பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், 342-வது பிரிவில் குழந்தையை அடைத்து வைத்தல், 302-வது பிரிவான கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் குற்றம்சாட்டப் பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மரண தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கின்றன. அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் தீர்வு என வாதங்கள் வைத்துள்ளோம். இருதரப்பு வாதங்கள் கடந்த 15 முதல் 17 -ம் தேதி வரை நடந்தது.
இவ்வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்தரப்புக்கு ஆஜராகவில்லை. சிறுமியை தங்கள் வீட்டு குழந்தையாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார்த்தனர். இலவச சட்ட உதவி மையம் மூலம் விழுப்புரம் வழக்கறிஞரை குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்காக நீதிமன்றம் நியமித்தது.
ஆவணங்கள், சான்றுகள்...
81 ஆதார ஆவணங்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் செருப்பு, ஆடை, முடி, கைப்பற்றப்பட்ட உயிரி மாதிரிகள், டிஎன்ஏவிவரங்கள் என 37 சான்று பொருட்களாக சமர்ப்பித்தோம்.
இவ்வழக்கில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தன. முக்கிய வழக்குகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தை இறப்பு , குழந்தை 12 வயதுக்கு கீழ் இருப்பது ஆகிய மூன்று முக்கியக் குற்றங்கள் அடிப்படையில் இவ்வழக்கு தண்டனைகள் இருக்கின்றன.
அதனால் தண்டனையை உடன் அறிவிக்க இயலாது என்ற நிலை இருக்கிறது. வழக்குகளில் குற்றவாளி தீர்ப்பு வந்த பிறகு தண்டனையைக் குறைக்க குற்றவாளி தரப்பும், அதிகபட்ச தண்டனை தர அரசு தரப்பும் மே 5-ல் வாதம் செய்யவுள்ளனர். அதன்பிறகுதான் தண்டனை விவரம் அறிவிக்கப்படும்’’ என்றார்.
இவ்வழக்கு தீர்ப்பையொட்டி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர். நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。