
























Updated on
:
1 min read
சென்னை: ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் ஏப்.29-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் என்பது தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பானவை. தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில், இந்தக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது.
மேலும், 29-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தின் பொருள் என்ன என்பதும் தெரிவிக்கப்பட வில்லை. எனவே, இந்தக் கூட்டத்தை தள்ளிவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பொறுப்பேற்ற பிறகு நடத்தவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தற்போதுகாபந்து அரசுகளே பதவியில் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பதவி ஏற்க உள்ள நிலையில், மாநில அதிகாரிகளை வைத்து இக்கூட்டத்தை நடத்துவது பொருத்தமற்றது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புது அரசுகள் பதவி ஏற்றவுடன் இக்கூட்டத்தை நடத்த வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்த கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது.
இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, மூன்று மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。