



























Updated on
:
1 min read
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளகோவிலில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு தாராபுரத்தைச் சேர்ந்த காவலர் ரவிச்சந்திரன் (35) பணியில் இருந்தார்.
அப்போது, பண்ருட்டியில் இருந்து வெள்ளகோவில் நோக்கி சவுக்கு மரங்களை ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக, சோதனைச் சாவடியில் இருந்த இரும்புத் தடுப்பின்மீது லாரி மோதியது. இதையடுத்து, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் செந்தில் (35), இரும்புத் தடுப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக காவலர் ரவிச்சந்திரனும் இரும்புத் தடுப்பை அகற்றிவிட்டு, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காவலர் ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோரை இடித்து தள்ளிவிட்டு, லாரி மீது மோதியது.
இதில் கார் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் செந்தில், காரை ஓட்டி வந்த ராம்(22), மயிலாடுதுறையைச் சேர்ந்த நரசிம்மன் (62), அவரது மனைவி சாந்தலட்சுமி (55), இவர்களது மகன் பாலாஜி (29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலறிந்த வெள்ளகோவில் காவல் துறையினர் உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தை கோவை சரக டிஐஜி சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது. உயிரிழந்த நரசிம்மன் மயிலாடுதுறை கோயிலிலும், மகன் பாலாஜி கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கோயிலிலும் குருக்களாக பணியாற்றி வந்தனர்.
ரூ.30 லட்சம் நிவாரணம்: இந்த விபத்து குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளகோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமை நிலையக் காவலர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது உயிரிழப்பு தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。