

























Updated on:
திருச்சி: மேகேதாட்டில் அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், திருச்சியில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், மேகேதாட்டுவில் அணை கட்ட தடை பெறுவது மற்றும் தமிழகத்துக்கு நதிநீர் உரிமை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர், இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் தெரிவித்ததாவது: விவசாய சங்கங்கள் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட 5 கோரிக்கைகளில் ஒன்றான மேகேதாட்டு அணை கட்டுமானத்துக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் வெற்றி பெற்றால், தமிழகத்தின் 19 மாவட்ட மக்களின் உணவு மற்றும் தண்ணீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். எனவே, விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்ற கருத்து குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. இதற்காக, காவிரி ஆறு குறித்த தரவுகளை திரட்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 2 மாநிலங்கள் தொடர்பான பிரச்சினையில் தனிநபராக வழக்கு தொடர்வதைவிட அரசுடன் இணைந்து வழக்கு தொடர்ந்தால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தில் தரவுகளின் அடிப்படையில் வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மேகேதாட்டு அணை பிரச்சினையை சட்டரீதியாக வென்றெடுக்கும் வகையில் விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடரப் போகும் வழக்கில் அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் இணைந்து பங்கேற்பது எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。