























Updated on
:
1 min read
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள அரசுப்பள்ளிகளில் (ஜூனியர் கல்லூரிகள்) 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி, “காங்கிரஸ் அரசு முதல் கட்டமாக சுமார் ரூ. 22,500 கோடி செலவில் 4.50 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 2,000 வீடுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஹைதராபாத் பெருநகர பகுதியில் உள்ள 24 சட்டப்பேரவை தொகுதிகளில், குறைந்த வருவாய் பிரிவினருக்காக ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து ஜூனியர் கல்லூரிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் (WEF) கூட்டத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்றிருந்தபோது வெளியிட்ட, 'அடுத்த தலைமுறை உயிரியல் அறிவியல் கொள்கை 2026-30' (Next-Generation Life Sciences Policy) திட்டத்திற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டையும், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளையும் ஈர்ப்பதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின் விநியோகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசின் 'RDSS' (மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டம்) திட்டத்தில் இணைவதற்கான மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOM) முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 'பாலமூரு - ரங்கா ரெட்டி' நீர்ப்பாசனத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகளுக்காக ரூ. 587 கோடியை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。