

























Updated on
:
1 min read
மும்பை: 1950-கள் முதல் 1970-கள் வரை இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கிய சுதேஷ் குமார், தனது 95-வது வயதில் மும்பையில் காலமானார்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது விருப்பத்தின் பேரில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை (மே 1) உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி நாளை (மே 4) நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.
1931-ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்த சுதேஷ் குமார், சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் மும்பைக்குக் குடிபெயர்ந்தார். தொடக்கத்தில் குறைந்த பட்ஜெட் படங்கள் மற்றும் பக்திப் படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 1959-ல் வெளியான 'சோட்டி பெஹன்' (திரைப்படத்தில் மருத்துவராக நடித்துப் பிரபலமானார். பின்னர் 1961-ல் வெளியான 'சாரங்கா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து 'பரோசா' (1963) மற்றும் 'கந்தான்' (1965) போன்ற பல முக்கியத் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
நடிப்போடு நின்றுவிடாமல் தயாரிப்புத் துறையிலும் தடம் பதித்த சுதேஷ் குமார், 'மன் மந்திர்' (1971), 'குலாம் பேகம் பாட்ஷா' (1973), 'உல்ஜன்' (1975) மற்றும் 'ஜான் ஹதேலி பே' (1987) உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், 'பியார் கா பந்தன்' மற்றும் 'தோ பதன்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றித் திரைக்குப் பின்னால் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சுதேஷ் குமார் 1982-ஆம் ஆண்டு ஜெயா நாயக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது இறுதி நாட்களை வீட்டில் கழிக்க விரும்பியதால் அழைத்து வரப்பட்டார். இவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மயானத்தில் நடைபெற்றது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。