


















Updated on:
சென்னை: ‘பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்’ என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டுமென்ற இலக்குடன், தொழில்கள் வளரவும், தொழிலாளர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
அதற்கேற்ப தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான நடைமுறை எளிதாக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்க தேவையான அனுமதிகளை ஒற்றைச்சாளர முறையில் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் தொழில் வளர்ச்சி அடைவதுடன், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு களும் உருவாக்கப்படும். அதேபோல், மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு புதிய தொழிற்கொள்கை வகுக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சிறப்பு ஊக்கத் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறையை டிஜிட்டல் தளமாக மேம்படுத்தி, அனைத்து அனுமதிகளையும் விரைந்து வழங்கி, தொழில் தொடங்க எளிமையான சூழல் உருவாக் கப்படும்.
பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ தலைமைச் செயலர் தலைமையில் ஏற்படுத்தப்படும்.
இதன்மூலம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் விரைந்து தொழில் தொடங்க அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு சிறந்த மின் ஆளுமை சேவைகளை வழங்கவும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பயன்படுத்த வழிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதச்சார் பற்ற கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。