




























Updated on
:
2 min read
எந்தப் பாடத்தில் இருந்தாவது ஒரு பக்க அளவில் வீட்டில் எழுதும்படி மாணவர்களுக்கு பள்ளிகள் முன்பெல்லாம் அறிவுறுத்தின. இவையன்றி ஒவ்வொரு பாடத்திலும் ஆசிரியர் சொல்லும் வீட்டுப்பாடமும் தனியே இருந்தது.
அது போன்று பள்ளிகளில் நடத்தப்படும் சிறு அளவிலான தேர்வில் விடையைத் தவறாக எழுதிவிட்டால் அதற்காக அவ்விடையை ஐந்து முறை, பத்து முறை எழுதி வரவேண்டும் என்பதே அன்றைய தண்டனை. நன்கு எழுதப் பழக வேண்டும், எழுத்து ஆழகாக, நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது அனைத்து பாடங்களுக்களுக்குமான வினா விடைகளை எழுதி, பள்ளி திறந்ததும் சமர்ப்பித்தல், சுற்றுப்பயணம் சென்று வந்தால் பயணக்கட்டுரை எழுதுதல், ஆண்டு மலரில் கதை, கவிதை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் என்பதெல்லாம் நடைமுறையாக இருந்தது.
ஆர்வமின்மை!
இதனால் அப்போது ஒரு வகுப்பறையில் பலரது எழுத்து திருத்தமாக, அழகாக இருந்தது. சிலரது எழுத்தைப் பார்க்கையில் ‘கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கு’, ‘எழுத்துக்கே மதிப்பெண் போட்டுருவாங்க’ என்றெல்லாம் கூறக் கேட்டோம்.
ஆனால், இன்று இவ்வகையான பயிற்சிகள், பழக்கவழக்கங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இன்றும் மாதிரித் தேர்வு, குறிப்பிட்ட ஒரு தலைப்பில் ஒப்படைவு (assignment) எழுதுவது போன்ற நடைமுறைகள் உள்ளன.
அது மட்டுமின்றி பல்வேறு துறைகள், சமூக நல அமைப்புகள் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளை நடத்தி ஆயிரக்கணக்கில் ரொக்கப் பரிசுகள் வழங்குகின்றன.
ஆனால், அவற்றில் மாணவர்கள் அவ்வளவாக அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை. இதனைக் காணும்போது கடந்த கால நடைமுறைகள் வழக்கொழிந்துபோனதுதான் காரணமா, மாணவர்களின் அலட்சியம் காரணமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன.
படிவம் எழுதும் பயிற்சி
முன்பெல்லாம் தனியார் பள்ளிகளானாலும், அரசுப் பள்ளிகளானாலும் மாணவ, மாணவியரை அஞ்சல் நிலையம், வங்கி, ரயில்நிலையம் ஆகியவற்றுக்கு அழைத்துச்செல்லும் வழக்கத்தை ஆசிரியர்கள் கடைப்பிடித்தனர். இந்த இடங்களில் பயன்பாட்டில் உள்ள படிவங்களைக் கொடுத்து பூர்த்திசெய்து எடுத்து வருமாறு கூறுவார்கள்.
அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதற்கு விளக்கம் அளிப்பதும் உண்டு. ஆனால், இன்றைய மாணவர்களில் பலருக்கு அஞ்சல் நிலையம் என்கிற ஒன்று இருப்பதே தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை. இதுபோன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்குச் செல்லும் போக்கு குறைந்துவிட்டதன், பக்கவிளைவாக எழுதுவதற்கான வாய்ப்பும் அருகிவிட்டது.
அதேபோன்று, திறன்பேசி புழக்கத்துக்கு வராதவரை உறவினர்கள், நண்பர்களை நலம் விசாரிப்பதற்குக் கடிதம் எழுதுவது, வாழ்த்து மடல் அனுப்புவது ஆதாரமாக இருந்தது. தற்காலத்தில், தேர்வின்போது மட்டுமே எழுதும் வழக்கம் கொண்டவர்களாக மாணவர்கள் மாறிவருகின்றனர்.
நலம் விசாரிப்பு, வாழ்த்துச் சொல்லுதல் என்பதெல்லாம் கைபேசி மூலமாக மட்டுமே என்றாகிவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுக்குப் பின்னர் எழுதுவதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.
வீட்டுப்பாடம், ஒப்படைவு, படிவங்கள் பூர்த்திசெய்தல் என்பதைக் கடந்து பார்ப்பவற்றை, படித்தவற்றைப் பற்றி எழுத வேண்டும். அப்போதுதான் நாளடைவில் கையெழுத்து அழகாகும்.
அது மட்டுமின்றி எழுத்துப் பயிற்சி சார்ந்த செயல்பாடுகள் மாணவர்களின் எழுத்தை அழகாக்குவதோடு, அவர்களின் சிந்தனைத் திறனை வளர்த்தல், வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கான முயற்சிகளாகவும் அமையும்.
- கட்டுரையாளர்: கல்வி ஆர்வலர், அரியலூர்; pranavsubu1971@gmail.com
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。