


























Updated on:
ரோம்: இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம் அரங்குக்குச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி ஜார்ஜியா மெலோனிக்கு ‘பார்லே மெலோடி' டாபிகள் (சாக்லெட்) அடங்கிய ஒரு பாக்கெட்டைப் பரிசாக வழங்கினார். இதையடுத்து, மெலோனி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ‘‘பிரதமர் மோடி எனக்கு ஒரு மிக மிகச் சிறந்த டாபியைப் பரிசாகக் கொண்டு வந்தார் — அதுதான் மெலோடி’’ என்று மெலோனி கூறியுள்ளார். அந்த வீடியோவின் தலைப்பில், ‘பரிசுக்கு நன்றி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மோடி மற்றும் மெலோனியின் பெயர்களின் கலவையான மெலோடி என்ற ஹேஷ்டேக், 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டின்போது இத்தாலி பிரதமரால் முதன்முறையாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வேகம்
பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சமீப ஆண்டுகளில், எங்கள் உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து வருகிறது. வளமான எதிர்காலத்துக்கான தொலைநோக்கு பார்வையை அடிப்படையாகக் கொண்ட சிறப்புமிக்க கூட்டணி உருவாகி உள்ளது.
சர்வதேச சூழல் மாற்றங் களை சந்திக்கும் வேளையில், இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இரு நாடுகளின் புதுமை கண்டுபிடிப்புகள், எரிசக்தி திறன் மேலாண்மை ஆகியவற்றால் 21-ம் நூற்றாண்டின் வளமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சர்வதேச அளவில் தொழில் துறை வல்லரசாக இத்தாலி வளர்ந்திருக்கிறது. இத்தாலியின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் எங்களது வலிமையைப் பறைசாற்றுகின்றன.
மேலும் 100-க்கும் மேற்பட்ட அதிக முதலீடு கொண்ட யூனிகார்ன் நிறுவனங்கள் மற்றும் 2,00,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, பொறியியல் திறமை, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் தொடங்க ஏற்ற சூழல் ஆகியவை சர்வதேச அளவில் போற்றப்படுகின்றன. இந்தியாவும் இத்தாலியும் இணைந்து சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் மோடிக்கு விருது
உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) மதிப்புமிக்க ‘அக்ரிகோலா பதக்கத்தை' புதன்கிழமை வழங்கி கவுரவித்தது. ஐந்து நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்ற பிரதமர் மோடி, ரோமில் உள்ள எப்ஏஓ தலைமையகத்தில், அதன் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யூவிடமிருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்வு
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி பார்லே மெலோடி சாக்லெட்டை பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்திய பங்குச் சந்தையில் பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை நேற்று மளமளவென 5% உயர்ந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பார்லே சாக்லெட் பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தயாரிப்பு இல்லை என்பதுதான். அந்த நிறுவனம் பிஸ்கெட்டையோ சாக்லெட்டையோ தயாரிக்கவில்லை. அது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். மெலோடி சாக்லெட் மும்பையைச் சேர்ந்த பிரபலமான எப்எம்சிஜி நிறுவனத் தயாரிப்பு ஆகும். இந்நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。