
















Updated on:
கராச்சி: பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் சனிக்கிழமை இரவு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை ராணுவப் படையான சிந்து ரேஞ்சர்ஸ் அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், முதற்கட்ட தகவல்களின்படி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கராச்சியின் முக்கிய பகுதியான குலிஸ்தான்-இ-ஜவ்ஹர் பகுதியில் அமைந்துள்ள ரேஞ்சர்ஸ் படை வளாகத்திற்கு அருகே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இப்பகுதி பல பல்கலைக்கழகங்களையும், பாகிஸ்தான் வானிலை ஆய்வுத் துறையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். சனிக்கிழமை இரவு அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த சக்திவாய்ந்த முதல் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு சிறிய வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில், அங்கு மறைந்திருந்த மற்ற பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து உஷாரான பாதுகாப்பு படையினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறை, ரேஞ்சர்ஸ் படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த ஒட்டுமொத்த பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்புப் படையினர், தீவிரத் தேடுதல் வேட்டையைத்தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் மறைந்துள்ளனரா என்பதை அறியும் வரை, பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா பாதுகாப்பு அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கோரியுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。