























Updated on:
திருவள்ளூர்: கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையை கட்டினால், தனது அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ். ராஜேஷ்குமார். இவர் முதன் முதலாக நேற்று திருவள்ளூரில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது, அவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து, அங்குள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள், காங்கிரஸ் தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஏரி, கூடியம் குகை, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை பார்வையிட்டு என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்.
அதற்கு முன்னதாக, நாளை (இன்று) சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பின் சுற்றுலாத்துறையில் பல்வேறு திட்டங்கள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசின் அனுமதியின்றி கட்ட முடியாது. தமிழக அரசின் அனுமதியில்லாமல், கர்நாடக அரசு அணையை கட்டினால் எனது அமைச்சர் பதவியை துறக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சசிகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் திவாகர் பங்கேற்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。