






















Updated on
:
1 min read
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மே 2-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை 0.9 கி.மீ. உயரத்தில் உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதனால்,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.29) மிதமான மழை பெய்யும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் நாளை (ஏப்.30)முதல் மே 2-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 1, 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 3, 4-ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் மே 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேற்படி நாட்களில் வெப்பநிலையும், ஈரப்பதமும் அதிகரிக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(ஏப்.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。