

























Updated on:
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரின் சகோதரரின் இறுதிச் சடங்கில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
ஷோயப் அக்தரின் சகோதரர் ஷாஹித் அக்தர், கடந்த வாரம் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பங்கேற்றனர். லஷ்கரின் துணைத்தலைவர் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்கஸி முஸ்லிம் லீக்கின் தலைவர் இனாம்-உர்-ரஹ்மான் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று என்ஐஏ விசாரணை மூலம் கடந்த ஆண்டு உறுதி செய்திருந்தது. இந்த அமைப்புதான் மும்பையில் கடந்த 2008-ல் நடந்த தீவிரவாத தாக்குதலையும் மேற்கொண்டது.
இப்படி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்பினரும், கசூரி போன்றவர்களும் பொதுவெளியில் சகஜமாக இயங்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளிப்பதன் மூலம், அவர்களுக்கு அளித்து வரும் ஆதரவு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கருத்தினை பல்வேறு முறை சைஃபுல்லா கசூரி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை இலக்காக வைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
அதன் பின்னர் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதற்கு ‘நீர் பயங்கரவாத செயல்’ என்று கசூரி விமர்சித்தார். மேலும், ‘கடல் வழியாக தாக்குதல் மேற்கொள்வோம்’, ‘எதிரிக்கு நிலம், நீர், ஆகாயம் என்று எங்கள் இடமில்லை’, ‘ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தன்னை அழைக்கின்றனர்’ என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தெரிவித்திருந்தார். இப்படி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஒருவரை பொதுவெளியில் பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதன் உள்நோக்கம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。