





















படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on:
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்புள்ள அரசு மதுபானக் கடையை தமிழக முதல்வர் அறிவிப்பின்படி நிரந்தரமாக மூடாமல், நூதன முறையில் பச்சை நிற நிழல் வலையால் மூடி மறைத்து வியாபாரம் செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் அதிகாரிகள் துணையோடு விதிமீறல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார். அதனடிப் படையில் தமிழகம் முழுவதும் 717 மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிட்டார். தமிழக முதல்வரின் உத்தரவையொட்டி மதுரை மாவட்டத்தில் 50 கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
அதில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ள கடைகள் உட்பட 50 கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் அறிவித்தவுடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பிருந்த அரசு மதுபானக் கடை மூடப்பட்டது. ஆனால் சில நாட்களில் மீண்டும் திறக்கப்பட்டது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் இருப்பதால் தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் அரசு மதுபானக் கடைகளில் இந்தக் கடையும் ஒன்று.
இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடையை நடத்த முடிவெடுத்துள்ளது. இதனால் நூதன முறையில் கடையின் முன் பச்சை நிழல்வலையை வைத்து பெயரளவில் மூடியுள்ளனர். கடையானது மக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதே தவிர விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. தமிழக முதல்வரின் உத்தரவை மதிக்காமல் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், பெண் பயணி களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெண் பயணிகள் கூறுகையில், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பெண்கள், மாணவிகள் அதிகம் வருகின்றனர். பேருந்து நிலையம் முன்புள்ள அரசு மதுபானக்கடை, அதனை யொட்டியுள்ள பார்களிலும் குடித்துவிட்டு வருபவர்கள் போதையில் தள்ளாடுகின்றனர்.
அவர்களின் தரக்குறைவான பேச்சும், செயல்பாடுகளும் பெண் பயணிகளை சிரமப் படுத்துகிறது. கடையை மூடுவதற்கு பதிலாக, பச்சை நிற நிழல்வலை மூலம் மறைத்து ஏமாற்றுகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மற்ற கடைகளைப்போல் இக்கடையையும் மூட வேண்டும், என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。