


























Updated on:
துரைப்பாக்கம்: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மதுராபேட்டை கிராமத்தில் உள்ள குடும்ப பாரம்பரிய நிலத்தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு அபகரித்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், தாம்பரம் மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை தி.நகர் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்த சி.ஆலயம்மாள் என்பவர் அளித்த புகாரில், அவரது தந்தை சி.குப்புசாமி கடந்த 1973-ம் ஆண்டு (02.01.1973) உயிரிழந்த நிலையில், அவர் உயிருடன் இருந்தது போல் போலி கையெழுத்திட்டு 12.05.1981 தேதியிட்ட கிரயப்பத்திரம் உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
புகாரின்படி, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் 2.5 சென்ட் நிலம் மல்லிகா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிலம் மல்லிகாவிடமிருந்து வேல்முருகன், அதன் பின்னர் மரிய மிக்கேல் என்பவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு சான்றிதழின்படி ஆலயம்மாள் மற்றும் அவரது சகோதரர் சீனிவாசன் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள் எனக் கூறப்படும் நிலையில், நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வெங்கடேசன், மல்லிகா, வேல்முருகன், மரிய மிக்கேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பத்திரப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், குற்றச்சாட்டுக்கு உட்பட்ட நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。