

























Updated on:
சென்னை: தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக பேருந்து பயணம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தை துரிதமாக தயாரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக், போக்குவரத்துத் துறை செயலர் மா.வள்ளலார் மற்றும் துறைசார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதில், தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு செயல் திட்டங்கள் தயாரிப்பது குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பயணிகள் நலனுக்காக புதிய சாஃப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேருந்துகளின் புறப்பாடு, வருகை, நிறுத்தங்கள் ஆகிய வற்றை ஜிபிஎஸ் மூலம் இணைத்து 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். துரிதமாக தயாரிக்க வேண்டும் மேலும், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக செயல் திட்டத்தை துரிதமாக தயாரித்து வழங்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும். பேருந்து போக்குவரத்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்ட செயலாக்கத்தின் மேல் நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் விஜய் வழங்கினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。