




















Updated on:
அருப்புக்கோட்டை: “சட்டப்பேரவையில் தனிப்பட்ட முறையிலான தாக்குதலில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியது: “இந்தியாவில் இருக்கின்ற சட்டமன்றங்களிலே, பெரும் கீர்த்தியும், புகழும் வாய்ந்தது நமது தமிழக சட்டமன்றம்தான். மக்கள் அதிகாரத்தின், இறையாண்மையை வெளிப்படுத்துகின்ற இடம் அது. அதை கடந்த முறை ஆளுநர் அலட்சியப்படுத்தினார். அவருக்கு தமிழக மக்கள் நல்ல பாடங்களைப் புகட்டினர்.
சட்டப்பேரவையில் தனிப்பட்ட முறையிலான தாக்குதலில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. சட்டப்பேரவையில் யாரையும் தாழ்த்திப் பேசக்கூடாது. உடல் மொழியால் விமர்சிக்கக் கூடாது. பண்பு தவறிய வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தந்தையைத் தேடுகிறேன் என முதல்வர் கூறியது ஏற்புடையது அல்ல. அதேபோல், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியதும் ஏற்புடையது அல்ல. மக்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. அதைப் பற்றி நாம் கூட்டாகச் சிந்திக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
மத்திய அரசுடன் நிர்வாக அளவில் நாங்கள் முரண்படமாட்டோம் என்று தமிழக முதல்வர் சொல்லியிருப்பதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மத்திய அரசுடன் நிர்வாக அளவில் முரண்படக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை. அதேநேரத்தில், மாநிலங்களை மத்திய அரசு ஒரு வேலையாள் போல், பணியாள்போல் கருதக் கூடாது. கடந்த முறை மாநில உரிமைகளை மத்திய அரசு மீறியது. எனவே, மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதியை அது முடக்கியது. நமது நலத்திட்டங்களுக்கு உரிய நிதிகளை வழங்க மறுத்தது.
இந்த அரசும் மாநில உரிமைகளுக்காக போராட வேண்டும். நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. பிரதமருடனும், மத்திய அரசுடனும், நிர்வாகத்துடனமும் முரண்பாடு இல்லாமல், இணைந்து செயல்படுவது யாருக்கும், எந்த வேறுபட்ட கருத்துக்ளுக்கும் இடம் கொடுக்காது. அதேவேளையில், ஒருபோதும் மாநிலங்களின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. எப்பொழுதுமே மதச்சார்பின்மையை முதல்வர் விஜய் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவார் என்று நாங்களும் நம்புகிறோம்.
நாடு கடந்து, புலம்பெயர்ந்து பல லட்சக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. மருத்துவம், கல்வி, வாழ்விடம், பணியிடம் குறித்த ஓர் ஆய்வை முதல்வர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
நாங்கள் திமுகவோடு மட்டுமல்ல, அதிமுகவோடும் பயணித்திருக்கிறோம். ஜனநாயக சக்திகள் அனைத்தோடும் இனியும் நாங்கள் பயணிப்போம்.
வெள்ளை அறிக்கை பற்றி, நிர்வாகத்தை பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் வெளியில் இருக்கிறோம். நாங்கள் அதிகாரத்துக்கு வருகிறபோது அதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
மத்திய அரசு பெற்றுள்ள கடனோடு ஒப்பிட்டால் மாநில அரசு கடன்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி தருகிற வகையில் நாட்டின் பிரதமரே கடன் பெற்றிருக்கிறார். இந்தியாவே கடன் பெற்றிருக்கிறது. உலக வங்கி சொல்லுகிறபடி நாம் நடக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடன் இல்லாத ஒரு தற்சார்பு சூழலை நோக்கி இந்தியா, தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. இந்தக் கடனை தமிழ்நாடு தனது உற்பத்தி திறனைக் கொண்டுதான் அடைக்க வேண்டும். அதில் தற்சார்புதான் மிகப் பெரிய பங்களிப்பு. கடன் சுமையிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றால், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட வேண்டும். இதில், மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரம்பக் கல்வி துவங்கி, உயர் கல்வி வரை, அரசு கல்வி நிறுவனங்கள் இன்னும் கூடுதல் கவனம் பெற வேண்டும். அது மிகச் சிறந்த நிலையை எய்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. அதற்கான முழு ஒத்துழைப்பை கம்யூனிஸ்ட் கட்சி தரும்” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。