

























Updated on
:
1 min read
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 2-வது நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். நேற்று (ஏப்.26) காலை கொடைக்கானலின் இயற்கை அழகை ரசித்தபடி, நட்சத்திர ஏரி பகுதியில் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் கைக்குலுக்கி, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஒரு மணி நேரம் நடைப்பயிற்சிக்கு பிறகு தங்கும் விடுதிக்குச் சென்ற அவர், நேற்று முழுவதும் அறையிலேயே தங்கி ஓய்வெடுத்தார். இதற்கிடையே, அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பொதுமக்கள் ஆரவாரம்: இந்நிலையில் இன்று (ஏப்.27) திங்கட்கிழமை காலை கொடைக்கானல் நகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், வனப்பகுதியை ஒட்டிள்ள மனோரஞ்சிதம் அணை பகுதியில் மூலிகை காற்றை சுவாசித்தபடி, ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இதை அறிந்த, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவரை பார்ப்பதற்காக அணையின் வெளிப்பகுதியில் காத்திருந்தனர். நடைபயிற்சி முடிந்து வெளியே வந்த முதல்வரின் காரை பார்த்ததும் துள்ளிக்குதித்து ஆரவாரத்தில் சத்தம் போட்டனர்.
சில நிமிடங்கள் காரை நிறுத்தி, காரில் இருந்தபடி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், தங்கும் விடுதிக்கு சென்ற முதல்வர் இன்று மாலை சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கவும், குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。