





















Updated on
:
1 min read
சென்னை: பாதிக்கப்படும் கால்நடைகளின் அவசர சிகிச்சைக்கு செல்லும் களப்பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற கால்நடைத்துறை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கச் செயலாளரான டாக்டர் ஏ.செந்தில்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: கால்நடை விவசாயிகளுக்கு தக்க நேரத்தில் ஆலோசனை வழங்கவும், நிர்வாக வசதிகளுக்காகவும் தமிழக கால்நடைத்துறையில் ‘கால்நடை வளம்’ என்ற மொபைல் செயலி கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலி மூலமாக கால்நடை விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளையும் உடனுக்குடன் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டு விளக்கம் பெற முடியும்.
அவசர காலகட்டங்களில் கால்நடை மருத்துவர்களை அணுக முடியும் என்றாலும், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களும் தங்களுக்கான வருகைப்பதிவேட்டை அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் இருந்து இந்த செயலி வாயிலாக காலை மற்றும் மாலை வேளைகளில் முக வருகைப்பதிவேடு மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை அலுவல் ரீதியாக வெளியூர் சென்றாலோ அல்லது களப்பணி ஆய்வு, முகாம் அல்லது கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக அவசரப்பணியாக வெளியே செல்ல நேரிட்டாலும், இந்த செயலி மூலமாக காரணத்தை தெரிவித்து உயரதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்கள் அவசர காலகட்டங்களில் ஒவ்வொரு முறையும் உயரதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றே செல்ல வேண்டுமென்றால் கால்நடைகளின் இறப்பு சதவீதம் அதிகரித்து விடும். மேலும், இதுபோன்ற முக வருகைப்பதிவேடு நிர்வாக பணியாளர்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை என்பதும் ஒருதலைபட்சமானது.
எனவே, களப்பணியாளர்களுக்கு மட்டும் கால்நடை வளம்செயலி மூலமாக முக வருகைப்பதிவேடு செய்ய வேண்டும் என்றும், அவசர காலகட்டங்களிலும் முன்அனுமதி பெற்றே வெளியேசெல்ல வேண்டும் என்றும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்குவந்தது. அப்போது மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரியும், அரசு தரப்பில் சிறப்பு அரசுவழக்கறிஞர் டி.சந்திரசேகரனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவசரப் பணி, கள ஆய்வு மற்றும் முகாம்களுக்கு செல்லும் கால்நடைத்துறை களப்பணியாளர்கள் முன்அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。