




















Updated on:
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் தன் 19 வயது மனைவியை வேறொருவர் கடத்திவைத்திருப்பதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளையில் ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப்பித்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையின்போது சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தன்னைவிட இரண்டு மடங்கு வயதானவரோடு தன்னால் வாழ முடியாது என்றும் தங்கள் இருவருக்கும் இடையே இணக்கத்தைவிட முரண்பாடுகளே அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன் கணவர் புகார் அளித்திருக்கும் நபருடன் வாழவே தான் விரும்புவதாகவும் அந்தப் பெண் கூறினார். சட்டப்படியான விவாகரத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணை மணந்துகொள்ள விரும்புவதாக அவருடைய காதலர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், “19 வயதுடைய பெண் தன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. அவர் கணவர் வீட்டுக்கோ பெற்றோர் வீட்டுக்கோ செல்லத் தேவையில்லை” எனத் தீர்ப்பளித்தனர். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களின் சட்டப் பாதுகாப்புக்காக 2024இல் மத்தியப் பிரதேச அமைப்பால் உருவாக்கப்பட்ட ‘சௌரிய தீதி’ அமைப்பினர் அந்த இளம்பெண்ணுக்கு ஆறு மாதங்கள் வரை துணை நிற்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீண்டாமை தவறு:
குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை 2018 செப்டம்பர் 28 அன்று நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. வழிபாட்டுத் தலத்தில் பெண்களுக்கு விலக்கு அளிக்கும் கேரள அரசின் 1965ஆம் ஆண்டின் விதி தவறானது என ஐந்து நடுவர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நடுவர்கள் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது.
அந்த விசாரணையின்போது, “பெண்களின் மீது மாதத்தில் மூன்று நாள்கள் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதையும் நான்காம் நாள் அந்தத் தீண்டாமை விலக்கிக்கொள்ளப்படுவதையும் ஒரு பெண்ணாக என்னால் ஏற்க முடியாது” என நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார். இது தீண்டாமையை ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட அரசமைப்பு சட்டக்கூறு 17க்கு எதிரான செயல்பாடு எனவும் அவர் தெரிவித்தார். “பெண்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை சமூகத்தின் நோய்க்கூறு என்றாலும் அது மத நம்பிக்கையின் பெயரால் அறியப்படுகிறபோது இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் உணர வேண்டும்” எனவும் பி.வி.நாகரத்னா தெரிவித்தார்.
மேலும், மாநில, மத்திய நீதி அமைப்புகளிலும் பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் பிரிவிலும் பெண்கள் குறைந்தபட்சம் 30 சதவீத அளவிலாவது இடம்பெற வேண்டியது கட்டாயம் எனவும் அவர் வலியுறுத்தினார். பெண்களின் பங்கேற்புதான் நீதித்துறையில் பாலினப் பாகுபாடற்ற தீர்ப்புகளுக்கும் கொள்கைகளுக்கும் அடித்தளமாக அமையும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。