






















Updated on:
மதுரை: தமிழகத்தில் தொடர்ந்து வனக் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: தென் மாவட்டங்களில் மரங்களை வெட்டுதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், கடத்தல், யானை வழித்தடங்களை அழித்தல், காட்டுத்தீயை ஏற்படுத்துவோர் போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தவறுகளை பலர் மீண்டும் மீண்டும் செய்கின்றனர். இருப்பினும் அவர்களை வனக் குற்றவாளிகளாக கருதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதில்லை.
தமிழகத்தில் 2009 முதல் 2019 வரை வனக் குற்றவாளிகள் பிரிவில் 26 பேர் மட்டுமே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறையில் வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் குற்றங்களை தடுப்பதற்கும், விசாரிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் வனக் குற்றங்களை தடுக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் வனக் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக உள்துறை, வனத்துறை முதன்மை செயலர்கள், தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。