












Updated on
:
1 min read
சென்னை: தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது இளம்பெண் ஒருவர், பெண் சமூக ஆர்வலர் மற்றும் உறவினர்கள் சிலருடன் அங்கு சென்று, நீதி வேண்டும் என்ற பதாகை ஏந்தி திருமணத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் பாரதி தலைமையிலான போலீஸார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில், அந்தப் பெண் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர், வடபழனியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்துள்ளார். அப்போது அவருடன் வேலைபார்த்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் (திருமணம் நடக்க இருந்தவர்) ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், தன்னை இந்த இளைஞர் இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லியதை அடுத்து அவரும் மதம் மாறியுள்ளார். இந்தச் சூழலில்தான், வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்ததும், அதைத் தடுப்பதற்காக வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் மற்றும் சிலரை ஆய்வாளர் சிதம்பரம் பாரதி ஒருமையில் திட்டியதோடு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் குறித்து நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடமும் வரம்புமீறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஆய்வாளர் சிதம்பரம் பாரதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。