

























Updated on:
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும், அஜாக்கிரதையாக இருந்த எஸ்எஸ்ஐ உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் ஏழுரு பகுதியைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34). கார் விற்பனை செய்வதாகக் கூறி ஒரே காரை பலருக்கும் ஆன்லைனில் காண்பித்து மோசடி செய்ததாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பிம்முடு அஜித்குமார், திருப்பூர் வடக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போலீஸார் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 12-ம் தேதி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற போது, பிம்முடு அஜித்குமார் அங்கிருந்து தப்பினார். இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிம்முடு அஜித்குமார், சேலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதாவது, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிப்பதற்காக, ஆயுதப்படை போலீஸ்காரரான முகமது ரோஷனுக்கு, தனது நண்பர் விஜயகுமார் ஆன்லைன் மூலம் ரூ.20,000 அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, முகமது ரோஷன் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். மேலும், பாதுகாப்பு பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட சிறப்பு எஸ்ஐ பெரியசாமி, ஆயுதப்படையைச் சேர்ந்த பாரதிதாசன், அசோக்குமார் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில் லஞ்சம் தந்த விஜயகுமாரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。