




















Updated on
:
1 min read
சென்னை: பனையூரில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக எம்எல்ஏக்கள் சிலர் மாயமானதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது.
தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி, மற்ற கட்சிகள் தவெக எம்எல்ஏக்களைத் தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் நடத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதால், இதனைத் தவிர்க்க தவெக தலைமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சென்னைக்கு அருகில் உள்ளமாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களைத் தவிர்த்து, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 எம்எல்ஏ-க்களை, மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாகத் தங்கவைத்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம் ரத்து
இந்நிலையில் நேற்று காலை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அனைத்து எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மாமல்லபுரத்தில் இருந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இருந்தாலும், எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் விடுதிக்கு அனுப்பப்படாமல், இரவு வரை பனையூர் அலுவலகத்திலேயே தங்கவைக்கப்பட்டனர். அப்போது, பதவியேற்பு விழா எப்போது என்று எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை சமாதானப்படுத்தினார். இதற்கிடையே, எம்எல்ஏ-க்களில் சிலர் திடீரென மாயமானதாகத் தகவல் வெளியானது.
10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன, தவிர அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, தவெக எம்எல்ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகப் செய்திகள் பரவின.
மாயமாகவில்லை என மறுப்பு
இச்செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இதுகுறித்து தவெக தரப்பில் கேட்டபோது, ``எம்எல்ஏ-க்கள் யாரும் மாயமாகவில்லை. பதவியேற்பு விழா தள்ளிப் போனதால், ஒருசிலர் அனுமதி பெற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
மேலும் சிலர் சொந்த காரணங்களுக்காக வெளியே சென்றுவிட்டு, பின்னர் பனையூர் அலுவலகத்துக்கே வந்துவிட்டனர். அனைத்து எம்எல்ஏ-க்களும் கட்சித் தலைமையின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பாக உள்ளனர்'' எனத் தெரிவித்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。