






















ஆனைமங்கலம் செப்பேடுகள்.
Updated on
:
1 min read
சென்னை: நெதர்லாந்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 11-ம் நூற்றாண்டு சோழர் கால ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ உடனடியாகத் தமிழகத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மே 16-ம் தேதி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற இந்த வரலாற்று ஆவணங்களை மீட்டெடுத்த மத்திய அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதேசமயம், மீட்கப்பட்ட அந்தப் பட்டயங்கள் இன்னும் அவற்றின் சொந்த மண்ணான தமிழகத்துக்கு வந்து சேரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ராஜேந்திர சோழனின் அரச முத்திரையுடன் கூடிய 21 பெரிய மற்றும் 3 சிறிய செப்பு ஏடுகளைக் கொண்ட இந்த ஆனைமங்கலம் பட்டயங்கள், உலக வரலாற்றில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன. தற்போது இந்தப் பட்டயங்கள் டெல்லியில் உள்ள மத்திய சேமிப்பகத்தில் வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தின் கலாச்சார அடையாளமான இந்தப் பட்டயங்கள், அவற்றுக்குச் சொந்தமான தமிழ் மண்ணிலேயே காட்சிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரம் அல்லது நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் இவற்றை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 49-வது பிரிவின்படி, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். எனவே ஆனைமங்கலம் பட்டயங்களையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் இந்தியத் தொல்லியல் துறையிடம் பேசி, பட்டயங்களை நிரந்தரமாகத் தமிழகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பட்டயங்களை மீட்பது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。