

























Updated on
:
1 min read
கும்பகோணம்: பாபநாசம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி ஆசிரியையை வழிமறித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த இளைஞரை, பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்த அப்பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் போலீஸில் சரணடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பிராந்தையைச் சேர்ந்தவர் மு.புண்ணிய மூர்த்தி. இவரது மகள் காவியா (26). ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரும், மேல களக்குடியைச் சேர்ந்த அஜித் குமாரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
காவியாவின் பெற்றோர் இவர்களது திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. மேலும், வேறொருவருடன் காவியாவுக்கு நிச்சயதார்த்தம் செய்துவைத்தனர். இதுகுறித்து அஜித்குமாருக்கு தகவல் தெரிவித்ததுடன், நிச்சயதார்த்த புகைப்படத்தையும் காவியா அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார், கடந்தாண்டு நவ.27-ம் தேதி காவியாவை, வழிமறித்து வெட்டிக் கொலை செய்தார்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இதையறிந்த புண்ணியமூர்த்தி, அஜித்குமாரை பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டார்.
இதன் தொடர்ச்சியாக உறவினரான ஆலங்குடி கன்னித்தோப்பைச் சேர்ந்த லோகேஷ், ராமலிங்கம், புலவர்நத்தம் கருப்பையா ஆகியோருடன் நேற்று அதிகாலை 4 மணியளவில் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதுகுறித்து மெலட்டூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள், மேல களக்குடி சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。