
























மெட்ரோ ரயில் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை திறந்து வைக்கும் பெண் பயணி. அருகில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள்.
Updated on
:
1 min read
சென்னை: சென்னையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில், 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பான, விரைவான, சொகுசான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. பயணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, அவர்களின் தேவைகளை, வசதிகளை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம் மற்றும் அதன் நீட்டிப்பு வழித் தடத்தில் உள்ள 27 மெட்ரோ ரயில் நிலையங்களில், 55 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த கூடுதல் வசதியை, மெட்ரோ ரயில் பயணிகள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொதுமேலாளர் எஸ்.சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் பராமரிப்பு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த கூடுதல் வசதியின் மூலம், ஏற்கனவே இருந்த 226 நகரும் படிக்கட்டுகளுடன், புதிதாக நிறுவப்பட்டுள்ள 55 நகரும் படிக்கட்டுகளும் சேர்த்து நகரும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை தற்போது 281 ஆக உயர்ந்து உள்ளன.
குறிப்பாக, திருமங்கலம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா 5 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் கோபுரம் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா 3 நகரும் படிக்கட்டுகளும், ஏஜி-டிஎம்எஸ், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, தியாகராஜ கல்லூரி, விம்கோநகர் பணிமனை, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, எல்ஐசி, நேரு பூங்கா, விமான நிலையம், அசோக் நகர், எழும்பூர், நந்தனம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகளும், பரங்கிமலை, சின்னமலை, உயர்நீதிமன்றம், மண்ணடி, தேனாம்பேட்டை, தண்டடையார்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகளும் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன.
இந்த நகரும் படிக்கட்டுகளை நிறுவி செயல்படுத்தும் பணி பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும், மெட்ரோ ரயில் சேவைகள் இல்லாத நேரங்களில் இப்பணிகளை மேற்கொண்டு, வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。