
























Updated on
:
1 min read
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் கீழ், டான்ஃபிநெட் மாவட்ட அளவிலான பங்காளர்களாக விரும்பும் தொழில்முனைவோர்கள் மே 4 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனமான டான்ஃபிநெட் நிறுவனம், பாரத்நெட் திட்டத்தில் மாநிலத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சிகளையும் குறைந்தபட்சம் 1 ஜிபி வேகத்திலான ஆப்டிகல் ஃபைபர் இணைய வசதியால் இணைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த இணைய சேவையை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்க்கும் இறுதிநிலை இணைப்பு பணிகளுக்காக, மாவட்ட ரீதியாக பங்காளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்கெனவே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட நிதித் தகுதி அளவுகோல்களுடன் விண்ணப்பிக்கும் இணையதளம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் மே 4-ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக டான்ஃபிநெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 2 மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. கூடுதல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மட்டும் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை டான்ஃபிநெட் நிறுவனத்தின் https://tanfinet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。