

























Updated on
:
2 min read
ராய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி. இந்த ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான விராட் கோலி 60 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக அவர், 21 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ரோவ்மன் பவல் தவறவிட்டிருந்தார். இதற்கான பலனை கொல்கத்தா அணி அனுபவித்தது. ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு இது 9-வது சதமாக அமைந்தது. கடந்த 2024-ம் ஆண்டு சீசனுக்கு பின்னர் அவர், தற்போதுதான் சதம் அடித்துள்ளார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறியதாவது: கடந்த இரண்டு போட்டிகளில் என்னால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை என்பது என்னை ஒருவிதத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதும், பந்துகளை சரியாக எதிர்கொள்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்லாமல், அணிக்கான அந்தத் தாக்கத்தை நாம் ஏற்படுத்தவில்லை என்று தெரியவரும்போது அது மனதை வருத்துகிறது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக இதுவே எனது இலக்காக இருந்து வருகிறது.
களத்தில் விளையாடும்போது அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளிக்கவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் என்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதே எனது நோக்கம். சதம் அடித்த பிறகு பெரிய அளவில் கொண்டாடவில்லை. அணிக்காக அதிகப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அழுத்தம் என்பது ஒரு வரம் என்று மக்கள் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது உங்களை அடக்கத்துடன் இருக்க வைக்கும்.
ஆரோக்கியமான அழுத்தம் எப்போதும் உங்கள் ஆட்டத்தை மேம்படுத்த உதவும். சில போட்டிகள் நீங்கள் நினைத்தபடி அமையாதபோது, ஒருவித பதற்றம் ஏற்படும். அந்தப் பதற்றம் உங்களுக்கு உதவும்.நான் எதையும் அதீதமாக செய்யாமல் எனது இயல்பான ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன். பந்தின் நீளத்தைக் கணிப்பதிலும், எனக்குக் கிடைத்த இடைவெளிகளில் பந்துகளை அடிப்பதிலும் கவனமாக இருந்தேன்.
எனது ஆட்டத்தை என்னால் முழுமையாக நம்பி விளையாட முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போதும் உலகின் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராகப் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு நாள் இந்த பயணம் முடிவுக்கு வரும் என்பதால், ஒவ்வொரு முறையும் களத்தில் எனது இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து விளையாடுகிறேன்.
கிடைக்கும் வாய்ப்புகளை நான் மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அழுத்தமான சூழ்நிலைகளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அங்கு நிலவும் சவாலான நேரங்களில் அதையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்று எனக்கு நானே சவால் விடுத்துக் கொள்கிறேன். விளையாட்டு பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.
அழுத்தத்தின் கீழ் செயல்படும்போதுதான் உங்கள் குணாதிசயம் செதுக்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த ஆட்டத்தின் மீது எனக்கு இருக்கும் காதல் குறையவில்லை. பேட்டின் நடுப்பகுதியில் பந்து படும்போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சி இப்போதும் எனக்குள் இருக்கிறது. இவை அனைத்தும் கடவுளின் அருள். அதற்காக நான் நன்றியுடனும் மனநிறைவுடனும் இருக்கிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。